2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் சர்ச்சைகள்
ஜீனத் அயூப்
இந்த ஆண்டு ஓகஸ்ட் 12 ஆம் திகதி நிறைவடைந்த பாரிஸ் ஒலிம்பிக், சமீபத்திய வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாக வாதிடப்படலாம்.
தொடர்ச்சியான சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆரம்பமான நிகழ்வு, 19 நாட்கள் நீடித்து, முழு உலகத்தின் விமர்சனப் பார்வையில் முடிவடைந்ததுடன், அதன் வெற்றியை கேள்விக்குள்ளாக்கியது.
பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் பிற வேறுபாடுகளை ஒரே உலக அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்தும், உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கும் ஓர் உலகளாவிய விளையாட்டு நிகழ்வாக, ஒலிம்பிக் போட்டியானது, உலகளாவிய ஒற்றுமையை ஊக்குவிப்பதாக மறுக்க முடியாத வகையில் வரையறுக்கப்படுகிறது.
இருப்பினும், பிரான்சின் பாரிஸில் நடத்தப்பட்ட 2024 கோடைகால ஒலிம்பிக் உலகளாவிய ஒற்றுமையை ஊக்குவிக்கும் நோக்கத்தை கொண்டிருந்தபோதிலும், சிக்கலான உலகளாவிய பதட்டங்கள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் சர்ச்சைகளுக்குரிய ஒரு தளமாக நிறைவடைந்தது.
2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஒருங்கிணைக்கும் நோக்கங்களுக்கும் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் மத சவால்களின் உண்மைகளுக்கும் இடையே பல முரண்பாடுகளை சுட்டிக்காட்டியது.
உலகளவில் 2024 ஒலிம்பிக்கில் மிகவும் விமர்சிக்கப்பட்ட அம்சம் என்னவென்றால், இந்த நிகழ்வானது பல்வேறு உலகளாவிய பதட்டங்களின் பின்னணியில், குறிப்பாக பலஸ்தீனத்தில் நடந்த இனப்படுகொலையின் பின்னணியில் நடைபெற்றமையாகும்.
பலஸ்தீனத்தில் நடந்துகொண்டிருக்கும் கொடூரங்களிலிருந்து உலகை திசைதிருப்பியதற்காக விமர்சிக்கப்பட்ட இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஆஸ்கார் விருதுகள் போன்ற பிற முக்கிய உலகளாவிய நிகழ்வுகளைப் போலவே, ஒலிம்பிக்கிலும் இத்தகைய சூழலில் நிகழ்ந்தமைக்காக பாரிய விமர்சனங்கள் எழுந்தன.
ஒலிம்பிக்கின் 19 நாள் காலப்பகுதி முழுவதும் மக்கள் தங்களது தொலைக்காட்சிகளில் இணைந்திருந்தாலும், பாலஸ்தீனியர்களுக்கு, இந்த நிகழ்வு அவர்களின் துன்பங்களுக்கான உலகின் அப்பட்டமான அலட்சியத்தின் மற்றொரு சான்றாகும்.
குழந்தைகள் உட்பட பாலஸ்தீனிய மக்கள், "உலகளாவிய சமாதானம் மற்றும் ஒற்றுமையை" ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு உலகளாவிய விளையாட்டு நிகழ்வு நடைபெறுவதைக் கூட அறிந்திருக்க மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் உயிர்வாழ்வதற்கான உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிடம் ஆகியவற்றைக் கண்டறிவதில் ஈடுபட்டனர்.
மறுபுறம், இந்த உலகளாவிய நிகழ்வு மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் சர்ச்சையை கிளப்பியது. பாரீஸ் ஒலிம்பிக்ஸ் ஆரம்ப விழாவில் லியோனார்டோ டா வின்சியின் பைபிள் காட்சியான "தி லாஸ்ட் சப்பர்" சித்தரிப்பை ஒத்ததாகக் கூறப்பட்ட ஒரு நிகழ்ச்சியாக இருந்தமையால் உலகெங்கிலும் இருந்தான கடும் எதிர்ப்புடன் ஆரம்பித்தது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்வு இந்த கலைப்படைப்பால் ஈர்க்கப்பட்டதாக மறுத்தாலும், தேவாலயத் தலைவர்களும் பழமைவாத அரசியல்வாதிகளும் இது கிறிஸ்தவத்தின் கேலிக்கூத்தாக அடையாளப்படுத்தினர்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் கிறிஸ்தவத்தை கேலி செய்ததாக குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல, முஸ்லிம் மத உணர்வுகளை குறிவைக்கும் சம்பவங்களும் நடந்தன. மிக முக்கியமான உதாரணம் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முஸ்லீம் பிரெஞ்சு விளையாட்டு வீரர்களுக்கு ஹிஜாப் தடை விதிக்கப்பட்டமையாகும்.
விளையாட்டு அமைப்புகள் பல பிரச்சாரங்கள் செய்த போதிலும், பிரான்ஸ் ஹிஜாபை தடை செய்யும் முடிவை மீள்பரிசீலனை செய்யவில்லை. இந்தத் தடையானது உலகளாவிய விளையாட்டு நிகழ்வால், குறிப்பாக உள்ளடங்கல் எண்ணக்கரு மூலமாக நிலைநிறுத்தப்பட்ட பல கொள்கைகளை அப்பட்டமாக மீறுவதாகும் என்பதுடன் இது வெளிப்படையான பாகுபாடுகளில் ஈடுபடுவதன் மூலம் சிறப்பையும், நட்பையும், மரியாதையையும் மேம்படுத்தும் நிகழ்வின் நோக்கத்திற்கு முரணானதாகும்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் கூற்றுப்படி, இந்த ஹிஜாப் தடை சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறுவதுடன் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) பலவீனத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
இருப்பினும், 2024 ஒலிம்பிக்கில் பெண்கள் மரதனில் தங்கம் வென்ற நெதர்லாந்து தடகள வீராங்கனை சிஃபான் ஹாசன், இறுதி பதக்க விழாவின் போது ஹிஜாப் அணிந்ததற்காக உலகளவில் பாராட்டப்பட்டார்.
நிகழ்வை ஒழுங்கமைத்த நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு ஹிஜாப் தடை விதிக்கப்பட்ட நிகழ்வில் ஹிஜாப் அணிந்த அவரது செயல் மிகவும் சக்திவாய்ந்த அறிக்கையாக பார்க்கப்பட்டது. அவர்களின் நம்பிக்கையின் காரணமாக ஒலிம்பிக்கில் இருந்து நியாயமற்ற முறையில் விலக்கப்பட்டவர்களுடன் ஒற்றுமையின் அடையாளமாக அவரது சமிஞ்சை செயற்பட்டது.
மதச் சர்ச்சைகள் மட்டுமின்றி, பால்நிலை அடிப்படையிலான பிரச்சினைகளையும் இந்த ஒலிம்பிக் கண்டது. அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப், பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் இத்தாலிய போட்டியாளரான ஏஞ்சலா கரினிக்கு எதிரான போட்டியின் பின்னர் உலகளாவிய கவனத்தைப் பெற்றார்.
கேலிஃப்பின் ஆரம்ப குத்துகளிலிருந்தான கடுமையான வலியைக் காரணம் காட்டி, போட்டி ஆரம்பித்த சில நொடிகளில் காரினி விலகினார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் கெலிஃப் ஒரு திருநங்கை அல்லது "உயிரியல் ரீதியான ஆண்" என்று தவறான வதந்திகளைத் தூண்டியதுடன், இது அல்ஜீரிய குத்துச்சண்டை வீரரை இலக்கு வைத்து இணைய மிரட்டல் மற்றும் நிகழ்நிலை துன்புறுத்தலுக்கு வழிவகுத்தது.
நிகழ்நிலை துன்புறுத்தல் மற்றும் இணையவழிக் கேலி ஆகியவை விளையாட்டு வீரரின் உள உறுதியை கணிசமாக பாதிப்பதுடன், இது அவர்களின் செயற்திறனை பாதிப்பதுடன் அடிப்படை மனித கண்ணியத்தை மீறும். இருப்பினும், இமானே கெலிஃப் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றதுடன், அதனைத் தொடர்ந்து நிகழ்நிலை துன்புறுத்தலுக்காக பிரான்சில் சட்டப்பூர்வ முறைப்பாட்டை தாக்கல் செய்தார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் பல நெறிமுறைகள் மற்றும் மனித உரிமைகள் கரிசனங்கள் ஏற்பட்டன. இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் காசாவிற்கு எதிரான அதன் போரில் போர்க்குற்றங்கள் இருந்தபோதிலும் இஸ்ரேல் பங்கேற்பது, நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மீது பரவலான விமர்சனத்தைத் தூண்டியது.
கடந்த ஆண்டுகளில், விளையாட்டுகளின் நோக்கிற்கு முரணான செயல்கள் காரணமாக நாடுகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டமையால் இஸ்ரேலின் சேர்க்கை ஒலிம்பிக் அமைப்பாளர்களின் இரட்டை நிலையை எடுத்துக்காட்டுகிறது.
இந்த ஆண்டு, உக்ரைனில் நடந்த போரின் காரணமாக ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகியவற்றிற்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், நிகழ்வில் இருந்து இஸ்ரேலை தடை செய்யுமாறு பல கோரிக்கைகள் இருந்தபோதிலும், ஒலிம்பிக் அமைப்பாளர்கள் இந்த கரிசனங்களை புறக்கணித்தனர்.
இந்த பிரச்சினைகள் முழு நாடுகளின் பங்கேற்பிற்கும் அப்பால் 2014 ஆம் ஆண்டு 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றம் இருந்த போதிலும், டச்சு கடற்கரை கரப்பந்து வீரர் ஸ்டீவன் வான் டி வெல்டேவை போட்டியிட அனுமதித்தமைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தமை போன்ற தனிநபர்களை உள்ளடக்குவதற்கும் நீட்டிக்கப்பட்டன.
வான் டி வெல்டே 2016 இல் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 2017 இல் விடுவிக்கப்பட்டார். 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக்கில் அவர் சேர்க்கப்பட்டிருப்பது, குறிப்பாக சமூக ஊடகங்களில், ஒலிம்பிக்கின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளை மீறுவதாகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
அவரது போட்டிகளின் போது பல சந்தர்ப்பங்களில் கூச்சலிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல அமைப்புகள் வான் டி வெல்டே ஒலிம்பிக்கில் இருந்து விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதுடன், விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் IOC இன்னும் முனைப்பான வகிபாகத்தை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
குற்றவியல் பதிவுகள் மற்றும் மனித உரிமை மீறல்களின் நீண்ட வரலாற்றைக் கொண்ட தனிநபர்கள் மற்றும் நாடுகளின் பங்கேற்பானது இந்த வகையான உலகளாவிய நிகழ்வின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது.
இந்த ஆண்டு ஒலிம்பிக்கின் போது வெளிப்பட்ட நெறிமுறை சார் கரிசனங்களுடன் இணைந்ததாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டிக்கான நிறை எல்லையை விட 100 கிராம் அதிகமாக இருந்தமையால் தனது நிகழ்வின் இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டமையும் உள்ளடங்கும். அவரது முதல் சுற்று போட்டிக்கு முன்னராக அவரது நிறை அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் இருந்ததாக கூறப்படுகிறது.
போகத்தின் தகுதி நீக்கம் பல தரப்பிலிருந்து குறிப்பாக ஒலிம்பிக்கில் தெளிவற்ற விதிகள் மற்றும் அவற்றின் விளக்கம் குறித்து விமர்சனங்களைத் தூண்டியது. இரண்டு நாட்களுக்குள் இது போன்ற சிறிய நிறை மீறலுக்காக ஒரு விளையாட்டு வீரர் மொத்தமாக தகுதி நீக்கம் கேள்விக்குரியதாகக் காணப்பட்டது.
சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதாகக் கூறும் ஒரு உலகளாவிய நிகழ்வாக, அதன் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் மிகவும் சீரானதாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும் என்பதால், ஒலிம்பிக்கின் விதிகள் எவ்வளவு தரப்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பற்றிய கரிசனத்தை இந்த நிலைமை மீண்டும் எழுப்புகிறது.
2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களின் சுற்றுச்சூழல், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீச்சல் தடைசெய்யப்பட்டிருந்த பாரிஸில் உள்ள சீன் நதி இந்த ஆண்டு சில நீச்சல் நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்பட்டது.
இருப்பினும், இந்த நிகழ்வுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, சீன் நதியில் உள்ள மாசு அளவுகள் மற்றும் அவை விளையாட்டு வீரர்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து பல கரிசனங்கள் இருந்தன. சீன் பகுதியில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற பின் பல விளையாட்டு வீரர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தவிர, பல விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்த மிகவும் மோசமான வாழ்க்கைத்தர நிலைமைகள் குறித்து முறைப்பாடு தெரிவித்தனர். விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சுகாதார நிலைமைகள் குறித்து கரிசனங்கள் எழுப்பப்பட்டன.
இந்த சாதகமற்ற நிலைமைகள், நிகழ்வின் போது பாரிஸில் நிலவிய கடுமையான வெப்பத்துடன் இணைந்து, விளையாட்டு வீரர்களின் செயற்திறனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.
ஒலிம்பிக் போன்ற உலகளாவிய நிகழ்வை நடாத்துவது மிகப்பெரிய பொறுப்பாகும். விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைத்தர நிலைமைகள் மற்றும் ஆரோக்கியத்தை புறக்கணிப்பது மோசமான முகாமைத்துவத்தையும் நிகழ்வின் விழுமியங்கள் மற்றும் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் தோல்வியையும் பிரதிபலிக்கிறது.
இத்தகைய அலட்சியம் நிகழ்வை நடாத்தும் நாட்டின் நற்பெயரையும் கெடுக்கும். இந்தக் கொள்கைகள் மற்றும் விழுமியங்களுக்கு இணங்குவதும், உலகளாவிய நிகழ்வை நிர்வகிக்கும் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதும் இவ்வாறான நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இன்றியமையாதாகும்.
இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் விதிகள் மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களால் வெளிப்படுத்தப்பட்ட இரட்டைத் தரநிலைகள் ஆகியவை இல்லையெனில் எழுந்த ஏராளமான சர்ச்சைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இதனால், நிகழ்வின் வெற்றி கேள்விக்குறியாகவே உள்ளது.
குறிப்பிடத்தக்க உலகளாவிய பதட்டங்கள், பாகுபாடுகள் மற்றும் மோதல்கள் உள்ள நேரத்தில், விளையாட்டு ஓர் ஒன்றிணைக்கும் சக்தியாக செயற்படும் திறனைக் கொண்டுள்ளது. இருப்பினும், 2024 பாரிஸ் ஒலிம்பிக் இந்த பிளவுகளை கடப்பதற்கான ஒரு பாலமாக செயற்படுவதை விட இவற்றை ஆழமாக்கியதாகவே தோன்றுகிறது.
Comments (0)
Facebook Comments (0)