புத்தளம் நகர பிதாவாக ரபீக்கை முன்மொழிய மு.கா தீர்மானம்
புத்தளம் நகர பிதா பதவிக்கு எம்.ரபீக்கை முன்மொழிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள புத்தளம் நகர சபையின் முன்னாள் நகர பிதா கே.ஏ. பாயிஸின் மறைவினை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே இவர் முன்மொழியப்படவுள்ளார்.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் விசேட கூட்டமொன்று புத்தளத்தில் இடம்பெற்றது.
இதன்போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"புத்தளம் நகர பிதாவாக மூன்று தடவைகள் பதவி வகித்த கே.ஏ.பாயிஸ் சில நாட்களுக்கு முன்னர் எம்மை விட்டு திடீரென மறைந்து போனார். இதனால் ஏற்பட்ட புத்தளம் நகர பிதா பதவி வெற்றிடத்தை நிரப்புவது சம்பந்தமாக அங்குள்ள கட்சி முக்கியஸ்தர்களோடும், கட்சியின் புத்தளம் நகர சபையின் உறுப்பினர்களோடும் கலந்தாலோசனையொன்றை கட்சியின் தலைமையும், செயலாளரும் இணைந்து நடத்தியிருக்கின்றோம்.
அதன்படி, சுமுகமான ஒரு தீர்வை எட்டி, வெற்றிடமாக இருக்கின்ற புத்தளம் நகர சபை தவிசாளர் பதவிக்கு தற்போதைய நகர சபை உறுப்பினரான கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற ரபீக்கை நியமிப்பது என்ற தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம்.
இது சம்பந்தமாக தேர்தல் ஆணையாளர் வெற்றிடத்தை வர்த்தமானியில் வெளியிட்டதன் பின்னர், அதற்கான தெரிவு திகதியை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்தவுடனேயே இவ்விடயம் தொடர்பில் உறுப்பினர் ரபீக்கின் பெயரை கட்சியின் சார்பில் ஏனைய உறுப்பினர்கள் ஏகமனதாக முன்மொழிவதாக ஒரு தீர்மானத்தை கட்சி உறுப்பினர்களும், கட்சி தலைமையும் சேர்ந்து எடுத்திருக்கின்றது.
புத்தளம் நகர சபை பிரதேசத்தில் பாரிய சேவையை செய்திருக்கின்ற கே.ஏ.பாயிஸின் திடீர் மறைவு ஏற்படுத்தியிருக்கின்ற வெற்றிடம் இலகுவாக யாராலும் நிரப்பிவிடக் கூடியதல்ல.
இருந்தாலும், கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக, பிளவுகள் இன்றி, எவ்வித சிக்கல்களும் இல்லாமல் தலைமைத்துவத்தோடு சேர்ந்து ஒருமித்த முடிவாக ரபீக்கை அதற்காக முன்னிலைப்படுத்துவது தொடர்பில் எடுத்திருக்கின்ற இந்த முடிவு எங்கள் அனைவருக்கும் ஆறுதல் அளிக்கின்றது" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)