இஸ்ரேல் - பலஸ்தீன மோதலில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வியடைகிறதா?
துல்மி திமான்சா
ஒக்டோபர் 2ஆம் திகதி புதன்கிழமையன்று, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சரான இஸ்ரேல் காட்ஸ், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸினை வரவேற்கப்படாத இராஜதந்திரி என்று அறிவித்ததுடன், அவர் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்தார்.
இந்த நடவடிக்கையை காட்ஸ் இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களை "வலுவாகக் கண்டிக்க" குட்டெரெஸ் தவறிவிட்டார் என்று கூறப்பட்டதன் அடிப்படையில் நியாயப்படுத்தினார். ஈரானின் கொடூரமான தாக்குதலை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்க முடியாத எவரும் இஸ்ரேலிய மண்ணில் கால் பதிக்க தகுதியற்றவர்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.
1,100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களைக் கொன்ற ஹமாஸ் நடவடிக்கையின் முதல் ஆண்டு நிறைவை, ஒக்டோபர் 7, 2023 அன்று உலகம் எதிர்கொண்டுள்ள வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலானது பலஸ்தீனம் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் போர் தொடுத்து வருகிறது. இதனால் 42,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும், 2,000 லெபனான் குடிமக்களும் உயிரிழந்துள்ளனர்.
ஹமாஸ் தலைவரான யாஹ்யா சின்வார் உட்பட உயர்மட்ட ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிருக்கின்ற சமீபத்திய பிரச்சாரங்கள், பிரான்ஸ் உட்பட இஸ்ரேலின் நட்பு நாடுகளிடமிருந்தும் கூட கண்டனத்தை ஈர்த்துள்ளன.
அமெரிக்க, ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு நாட்டுத் தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசிய பிரிட்டிஷ் பிரதமரான கெய்ர் ஸ்டார்மர், காசாவிற்கான இஸ்ரேலின் மனிதாபிமான உதவி தொடர்பாக "இனிமேலும் எந்த சாக்குப்போக்குகளையும் உலகம் பொறுத்துக்கொள்ளாது" என்று கூறினார்.
ஐ.நா. பொதுச்செயலாளரைத் தடை செய்வதற்கான இஸ்ரேலின் முடிவை மன்னிப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவைத் தவிர, இந்தக் பங்காளர்களில் பலர் அதைக் கண்டித்து உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேலின் முடிவு குறித்து வாஷிங்டனின் நிலைப்பாட்டை கேட்டபோது, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான மேத்யூ மில்லர், "அந்த நடவடிக்கை எந்த வகையிலும் பயனுள்ளதாக இல்லை" என்று பதிலளித்ததுடன், "ஐ.நா. காசாவில் நம்பமுடியாத அளவிற்கு முக்கியமான பணிகளைச் செய்கிறது" என்று மேலும் கூறினார்.
"அது சிறந்த முறையில் செயற்படும் போது, [ஐ.நா.] பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஓர் முக்கிய வகிபங்கினை வகிக்க முடியும்" என்று அவர் மேலும் கூறினார்.
பலஸ்தீனத்திலும் லெபனானிலும் இஸ்ரேல் நடாத்தும் இராணுவப் பிரச்சாரங்களில் இஸ்ரேலுக்கு தண்டனையில்லை என பலர் கருதுவதுடன், ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய போரின் அச்சுறுத்தலும் குட்டெரெஸ் அவர்களை வரவேற்கப்படாத இராஜதந்திரி என்று அறிவித்ததுடன் இணைந்து, ஐக்கிய நாடுகள் சபை பல் இல்லாத உடலாக மாறிவிட்டதுடன், அதனால் மோதல்களைத் தணிக்க இயலாது என்னும் சட்டரீதியான கேள்வி எழுந்துள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போர் உட்பட நெருக்கடி மற்றும் மோதல் காலங்களில் இதுபோன்ற கரிசனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், இஸ்ரேல் - பலஸ்தீனப் போர் அவற்றை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது.
193 அரச திறத்தவ உறுப்பினர்களுடன், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1945 இல் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, சமாதானம் மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், நாடுகளிடையே நட்புறவை வளர்த்தல் மற்றும் சமூக முன்னேற்றத்தை மேம்படுத்துதல் ஆகிய முதன்மை நோக்கங்களுடன் நிறுவப்பட்டது.
எவ்வாறாயினும், தற்போதைய உலகளாவிய ஒழுங்கு மற்றும் அதன் ஆரம்பத்திலிருந்து எழுந்த பல முரண்பாடுகளை ஆராயும்போது, அமைப்பின் வினைத்திறன் மற்றும் வகிபங்கு மிகவும் கேள்விக்குரியதாக உள்ளது.
வரலாற்று ரீதியாக, ஐ.நா சபையானது சமாதான முயற்சிகளுக்கு மத்தியஸ்தம் செய்வதிலும், சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்க பரப்புரையாற்றுவதிலும், அவசியமான போது மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் குறிப்பிடத்தக்க வகிபங்கைக் கொண்டுள்ளது.
இந்த அமைப்பு முரண்பட்ட தரப்பினரிடையே பேச்சுவார்த்தையை வசதிப்படுத்துவதிலும், உலக அளவில் இராஜதந்திரம் மற்றும் ஒத்துழைப்பின் கொள்கைகளை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. இது சமாதானத்தை பேணவும், சுகாதாரம் உட்பட பிற துறைகளில் ஒத்துழைப்பை செயற்டுத்தவும் கடுமையாகப் பாடுபட்டது.
எவ்வாறாயினும், சமகால சூழலில், திறத்துவ நாடுகளின் மாறுபட்ட நலன்களுடன் இணைந்து முக்கிய அதிகார சக்திகளால் வழிநடாத்தப்படும் செல்வாக்கானது, ஐ.நாவின் தீர்மானங்கள் மற்றும் தீர்மானமெடுக்கும் செயன்முறைகளின் வினைத்திறனை பாதிக்கும் ஓர் முக்கியமான கரிசனமாக வெளிப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பேரவை, உதாரணமாக, முழுமையான ஒருமித்த தன்மையை சார்ந்துள்ளதுடன்; எந்த ஒரு தீர்மானத்தையும் எந்தளவிற்கு நல்ல நோக்கமாக இருந்தாலும் அதன் ஓர் உறுப்பினர் வீட்டோ அதிகாரத்தை பிரயோகித்தாலே இடைநிறுத்த முடியும்.
இந்தத் தீர்மானங்களின் மீது ரஷ்யா மற்றும் சீனாவைப் போலவே காஸா மீதான பல தீர்மானங்களை அமெரிக்கா மீண்டும் மீண்டும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், செல்வாக்கு மிக்க உறுப்பு நாடுகளிற்கிடையிலான அரசியல் நிகழ்ச்சி நிரல் மற்றும் தேசிய நலன்களின் இடைச்செருகல் பல சமயங்களில் ஐ.நா.வின் தீர்க்கமாகச் செயற்படும் திறனைத் தடுக்கிறது.
குறிப்பாக பாதுகாப்பு பேரவை அதன் விமர்சகர்களின் பார்வையில் ஓர் அரசியல் அரங்காக மாறிவிட்டது. அதே சமயம், அதன் அசல் அங்கத்துவம் அவ்வாறே இருப்பதால், அது இன்றைய உலகின் போதுமான பிரதிநிதித்துவமுள்ளதாக இல்லை.
இலத்தீன் அமெரிக்க நாடுகளைப் போலவே இந்தியாவும் ஒரு அங்கத்துவத்தை கைப்பற்றப் போட்டியிடுகிறது. இந்த இரண்டு நாடுகளும், ஆப்பிரிக்காவைப் போலவே, பாதுகாப்பு பேரவையில் இருந்து வினைத்திறனாக ஓரங்கட்டப்பட்டுள்ளன.
மாறாக, ஐக்கிய நாடுகள் சபை அதன் செயற்திறனை சவாலுக்குட்படுத்தும் குறிப்பிடத்தக்க மட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அதன் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்குள் முயற்சிகளை மேற்கொள்கிறது என்று வாதிட முடியும்.
ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி முகவரகம் (UNRWA) போன்ற பல்வேறு ஐ.நா முகவரகங்கள் குறிப்பாக சமீபகாலமாக தீவிரமடைந்து வரும் போர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனிய சமூகங்களுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் முனைப்பாக ஈடுபட்டுள்ளன.
இந்த முயற்சிகள் மனிதாபிமான நெருக்கடியைத் தணிப்பதற்கான ஐ.நாவின் பரந்த பதிலளிப்பின் ஒரு பகுதியாகும் என்பதுடன், இது பாதிக்கப்படக்கூடிய மக்களின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான அதன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
மேலதிகமாக, ஐ.நா தொடர்ந்து சர்வதேசத்தை மனித உரிமைகள் தரநிலைகளை கடைபிடிக்கவும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் வன்முறையை உடனடியாக நிறுத்துவதற்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இருப்பினும், இந்த கோரிக்கைகள் இருந்தபோதிலும், இணக்கப்பாடு பெரும்பாலும் குறைவாகவே உள்ளதுடன், மனித உரிமைகளுக்கான கட்டுப்பாடு மற்றும் மதிப்பளிப்பிற்கான அழைப்புகள் அடிக்கடி பதிலளிக்கப்படுவதில்லை.
அதே சமயம், தீர்மானங்களை நிறைவேற்றி, ஆழமான கலந்துரையாடல்களை நடாத்தி, இஸ்ரேல் - பலஸ்தீனப் போரைத் தீர்ப்பதற்கு ஓரளவிற்கு பங்களிக்கின்றது. பாதுகாப்பு பேரவைக்கு மாறாக ஐ.நா. சபையானது ஓர் உலக அமைப்பாக செயற்பட்டு பின்னையதை விட உலகளாவிய தெற்கின் தார்மீக செல்வாக்கின் பிரதிநிதியாக உள்ளது.
UNGA இல் சமீபத்தில் நடைபெற்ற அமர்வு, இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக உலகளாவிய அபிப்பிராயம் எவ்வாறு குவிந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இஸ்ரேலிய பிரதம மந்திரியான பெஞ்சமின் நெதன்யாகு, உண்மையில், ஐ.நா.வை மிகக் கடுமையான வார்த்தைகளில் கண்டனம் செய்வதற்காக அரங்கை பயன்படுத்தியமை, மற்றைய உலகத் தலைவர்களால் உடனடியாக விமர்சிக்கப்பட்டது.
அதிகரித்து வரும் வன்முறையை எதிர்கொள்ள, பொதுச் சபை மேலதிக அமர்வுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன் உடனடியான போர்நிறுத்தங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு மனிதாபிமான நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
இந்தத் தீர்மானங்களில் பாலஸ்தீனிய உரிமைகளுக்கான பேரவையின் பரந்த ஆதரவு மற்றும் பிரச்சினைக்கு இராஜதந்திர தீர்வைத் தொடர்வதற்கான அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு ஆகியவை பிரதிபலிக்கின்றன.
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையணி (UNIFIL) சமீபத்திய தாக்குதல்களின் போது இஸ்ரேல் - லெபனான் எல்லையில் நடக்கும் சூழ்நிலைகளைக் கண்காணிப்பதில் குறிப்பிடத்தக்க வகிபங்கைக் கொண்டுள்ளது.
UNIFIL போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்கும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் அதன் ரோந்துப் பணியை அதிகரித்துள்ளது. இந்த கண்காணிப்பு இஸ்ரேல் மற்றும் லெபனான் படைகளுக்கு இடையே பாதுகாப்பு கரிசனங்களை நிவர்த்தி செய்வதற்கும் பதட்டமான சூழ்நிலைகளைத் தணிப்பதற்குமான பேச்சுவார்த்தைகளை விளைவாக்கியுள்ளது.
உலகளாவிய சமாதானம் மற்றும் மனித உரிமைகளை நிலைநிறுத்தும் ஒரு சர்வதேச அமைப்பாக, இத்தகைய மோதல்களில் ஐ.நா.வின் வகிபாகம் வெளிப்படையாக முக்கியமானதாகும். ஐக்கிய நாடுகள் சபை உலக சமாதானத்தைக் காக்கும் குறிக்கோளுடன் நிறுவப்பட்டது.
ஆனால் அதன் வினைத்திறன் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் தீர்வாக சமாதானத்தை ஆதரிக்கும் தீர்மானங்கள் மற்றும் பாலஸ்தீன உரிமைகள் ஐ.நா பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
ஆயினும், பாதுகாப்பு பேரவை தீர்மானங்களை விட அதிகமான பிரதிநிதித்துவமான மற்றும் உள்ளடங்கலான பொதுச் சபை வாக்குகள், பாதுகாப்பு பேரவையை போல அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை.
இஸ்ரேல் - பலஸ்தீனப் போர் ஐக்கிய நாடுகள் சபைக்குள் சீர்திருத்தத்தின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆயினும், அதன் செயலாளர் நாயகத்திற்கு எதிரான இஸ்ரேலின் மோசமான நடவடிக்கைகளுக்கான உலகின் பிரதிபலிப்பு சுட்டிக்காட்டுவது போல, காசா போன்ற இடங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விவாதங்கள் இருந்தபோதிலும், சக்தி வாய்ந்த நாடுகளின் சர்வதேச சமூகம் ஐ.நா.வின் கட்டமைப்பிற்கு அப்பால் செல்வதன் விளைவுகளைப் பற்றி அறிந்திருக்கிறது.
மேற்கிலுள்ள இஸ்ரேலின் பங்காளர்கள் கூட, குட்டெரெஸை தடை செய்வதற்கான அதன் முடிவை விமர்சித்தமை போரின் போது சமாதானத்தை பேணுவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் இருப்பிற்கான காரணத்தை நிரூபிக்கிறது.
துல்மி திமான்சா தற்போது Factum பணிபுரியும் இளைய ஆராய்ச்சி பயிலுனராவார். அவர் சர்வதேச உறவுகள் மற்றும் இராஜதந்திர மாணவராவார். அவரை dulmi@factum.lk என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்
Comments (0)
Facebook Comments (0)