கல்முனை RDHS பதவியில் எந்தவித மாற்றமுமில்லை
"கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியில் இதுவரை எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை" என சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக தற்போது பணியாற்றும் ஜீ. சுகுணன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து ஏற்படும் வெற்றிடத்திற்கு பொத்துவில் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எல்.எம். றிபாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் இன்று (07) ஞாயிற்றுக்கிழமை மாலை தகவல்கள் பரவின.
குறித்த இருவரும் நாளை (08) திங்கட்கிழமை காலை கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் குறித்த தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியொருவரை விடியல் இணையத்தளம் தொடர்புகொண்டு வினவிய போது, இன்று மாலை 7.00 மணி வரை இந்த நியமனங்கள் தொடர்பான எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.
அத்துடன் குறித்த நியனங்கள் தொடர்பிலான எந்தவித உத்தியோகபூர்வ அறிவித்தலும் இதுவரை கிடைக்கவில்லை என கல்முனை மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக உயர் அதிகாரிகள் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தனர்.
Comments (0)
Facebook Comments (0)