டிஜிட்டல் ஊடகவியலில் தொழில்திறன் சார்ந்தவர்களை ஒன்றிணைக்கும் தளமாக 'DMM' அறிமுகமாகிறது
சுதந்திர ஊடக இயக்கம் (FMM), சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனத்துடன் (IFJ) கூட்டிணைந்து மேற்கொண்ட கலந்துரையாடல் மற்றும் செயலமர்வுகளின் பின்னர் இலங்கையில் டிஜிட்டல் ஊடகவியலில் தொழில்திறன் சார்ந்தவர்களை ஒன்றிணைக்கும் தளமான 'டிஜிட்டல் ஊடக இயக்கம்' ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு 2021 டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பு ஜானகி ஹோட்டலில் நடைபெற்றது. IFJயின் ஒத்துழைப்புடன் FMM இனால் அன்றைய தினத்தில் 'ஆலோசனை மற்றும் டிஜிட்டல் ஊடக உரிமைகள்' எனும் தொனிப்பொருளில் டிஜிட்டல் ஊடக இயக்கத்தின் அங்கத்தவர்களுக்கான செயலமர்வொன்றும் நடத்தப்பட்டது.
இலங்கையில் டிஜிட்டல் ஊடகத் தொழில்திறன் சார்ந்தவர்களின் டிஜிட்டல் உரிமைகள் தொடர்பாகவும், டிஜிட்டல் தளங்களில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும், திறன்விருத்திக்கு பங்களிப்பு செய்வதாகவும் இந்த செயலமர்வு அமைந்திருந்தது.
வெகுசன ஊடகம் மற்றும் ஊடகங்கள் மீது தாக்கம் செலுத்தக்கூடிய சட்டங்கள் குறித்து நிபுணர் குழுவொன்றினால் டிஜிட்டல் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடலை நடத்தப்பட்டதுடன், அதில் மீளாய்வு செய்யப்பட்ட 'டிஜிட்டல் ஊடகத் தொழில்திறன் சார்ந்தவர்களுக்கான ஒழுக்கநெறிக் கோவை' க்கான வரைபொன்றும் தயாரிக்கப்பட்டது.
இந்த இயக்கத்தின் யாப்பினைத் தயாரித்தல் மற்றும் டிஜிட்டல் ஊடகத் தொழில்திறன் சார்ந்தவர்களுக்கான ஒழுக்கநெறிக் கோவையை தயாரித்தல் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நிபுணர் குழுவுடன் செயற்படுவதற்கு டிஜிட்டல் ஊடக இயக்கம் சார்பாக செயற்குழு அங்கத்தவர்கள் 13 பேர் தெரிவுசெய்யப்பட்டனர்.
டிஜிட்டல் ஊடக இயக்கத்தின் செயற்குழு அங்கத்தர்கள்
மஞ்சுள சமரசேகர (ஏற்பாட்டாளர்), கேஷாயினி எட்மண்ட் (இணைச் செயலாளர்), கே.எம். ரசூல் (இணைச் செயலாளர்), யோஷிதா பெரேரா, ரிஸ்வான் சேகு மொஹிதீன், சந்துன் அரோஷ பெர்னாண்டோ, வீ. பிரியதர்ஷன், தினேஷ் டி அல்விஸ், யசாரா சத்துராணி, எல். தேவாதிரன், காமிலா பேகம், சத்துரங்க பிரதீன் குமார, ரி. சரண்யா.
நிபுணர் குழு அங்கத்தவர்கள்
லசந்த டி சில்வா (ஏற்பாட்டாளர் - சுதந்திர ஊடக இயக்கம்), சீதா ரஞ்சனி (நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்- சுதந்திர ஊடக இயக்கம்). ஆனந்த தர்மப்பிரிய ஜயசேகர (சிரேஷ்ட ஊடகவியலாளர் / ஊடக பயிற்றுவிப்பாளர்), லக்ஷ்மன் குணசேகர (முன்னாள் பிரதம ஆசிரியர் - டெய்லிநியூஸ் செய்திப்பத்திரிகை), சுகுமார் ரொக்வூட் (பிரதம நிறைவேற்று அதிகாரி - இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு), கமல் லியனாராச்சி (முறைப்பாட்டு அதிகாரி-சிங்களம், இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு), சீ. தொடாவத்த ( தினமின பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் / நிறைவேற்றுக்குழு அங்கத்தவர் - சுதந்திர ஊடக இயக்கம்)
Comments (0)
Facebook Comments (0)