அமெரிக்காவினால் 120 பாடசாலைகளில் சுகாதார அறைகள் நிர்மாணம்

அமெரிக்காவினால் 120 பாடசாலைகளில் சுகாதார அறைகள் நிர்மாணம்

வலய கல்வி அலுவலகம் மற்றும் மாகாண கல்வி திணைக்களம் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நாடு முழுவதும் 120 பாடசாலைகளில் சுகாதார அறைகளை அமெரிக்கா நிர்மாணிக்கின்றது.

இது நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கு உதவுவதற்கான முன்னெடுப்பொன்றாகும். கொவிட்-19 இற்கு எதிரான அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கான கல்வி அமைச்சின் பரிந்துரைகளை இந்த சுகாதார அறைகள் ஊக்குவிக்கின்றன.

அத்துடன் படுக்கைகள், மெத்தைகள், முதலுதவி உபகரணங்கள், நகர்த்தக்கூடிய மறைப்பு திரைகள் மற்றும் நீர் விநியோகிப்பான்கள் ஆகியவற்றை இந்த அறைகள் கொண்டிருக்கும். தேவைப்படும் பட்சத்தில் இந்த அறைகள் மாணவர்களுக்கான தனிமைப்படுத்தல் அறையாகவும் செயற்படும்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அநுராதபுரம், கண்டி, மொனராகலை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுகாதார அறைகள், கொவிட்-19 தொற்றுநோய் பரவல் முடிவடைந்த பின்னரும் கூட மாணவர்களின் நல்வாழ்வை ஊக்குவிக்க பயன்படுத்தப்படும்.

மாணவர்கள் தங்களது பார்வையை சோதித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், ஏனைய சுகாதார சேவைகளையும் அணுக முடியும். இந்த சுகாதார அறைகளுக்கு யூஎஸ்எயிட் என்று அழைக்கப்படும் அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி முகவரமைப்பான சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் ஊடாக உதவியளிக்கப்பட்டது.
 
"50 வருடங்களுக்கு மேலாக, அமெரிக்காவின் உலகளாவிய சுகாதார திட்டங்கள் உயிர்களை காப்பாற்றியுள்ளன, நோயால் மிகவும் பாதிக்கப்படக்கக்கூடிய மக்களை பாதுகாத்துள்ளதுடன்  மற்றும் ஸ்திரமான சமூகங்களை ஊக்குவித்துள்ளன", என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்தார்.

"சந்தேகத்திற்கிடமான நோயாளிகளை தனிமைப்படுத்துவதில் சுகாதார அதிகாரிகளுக்கு உதவுவதன் மூலமும் இலங்கையின் கிராமிய பிரதேசங்களில் மாணவர்களின் ஒட்டுமொத்த சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலமும் கொவிட்-19 பரவலை குறைக்க நாம் உதவுகிறோம்", என்றும் அவர் குறிப்பிட்டார்.    

ஆய்வுக்கூட முறைமைகளை தயார்படுத்தல், நோயாளியை கண்டறிதல் மற்றும் நிகழ்வு அடிப்படையிலான கண்காணிப்பை செயல்படுத்துதல், மற்றும் பதிலளிப்பு மற்றும் தயார்நிலைக்கு தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உதவுதல் ஆகியவற்றின் மூலம் கொவிட்-19 இற்கு எதிராக போராடுவதற்கு அமெரிக்கா இலங்கைக்கு உதவுகிறது.

இந்த சுகாதார அறைகளானது அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியுள்ள 6 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கொவிட்-19 உதவியின் ஒரு பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.