வாசிப்பை வளர்க்கும் 10 வழிகள்

வாசிப்பை வளர்க்கும் 10 வழிகள்

-மிப்றாஹ் முஸ்தபா-

நவீனம் எனும் மாயைக்குள் சிக்குண்டு எத்தனையோ நல்ல விடயங்களை நாம் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். அந்த வரிசையில் இன்று எம்மிடையே வெகுவாகக் குறைந்து வருகின்ற பழக்கங்களில் ஒன்றாக வாசிப்பு மாறியிருக்கின்றது.

வாசிப்புப் பழக்கத்தை வெறுமனே ஒரு பொழுதுபோக்காக மாத்திரம் நோக்காமல் எமது வாழ்வியலோடு தொடர்புபடுகின்ற ஓர் அம்சமாகவும் நோக்க வேண்டும். வாசிப்பு மனிதனை முழுமையாக்கும், வாசிப்போர் வெற்றியடைவர், நூல்கள் நமது கண்கள் போன்ற பொன்மொழிகளெல்லாம் தற்காலத்தில் உயிரற்றுப் போய்விட்டன.

ஆனாலும் எமது முன்னோர்களின் வாழ்வோடு வாசிப்பு இரண்டறக்கலந்திருந்தது. அதனால்தான் அவர்களால் அதிகமான நூல்களைத் தமது அடுத்த பரம்பரைக்காக விட்டுச் செல்ல முடியுமாக இருந்தது.

துரதிஷ்டவசமாக இன்றைய இளைஞர்களும் மாணவர்களும் வாசிப்பில் ஈடுபாடு காட்டாத நிலையைக் காண்கிறோம். நூல்களை கையிலெடுத்தாலே தூக்கம், சோம்பல், ஆர்வமின்மை போன்ற எதிர்மறையான எண்ணங்களே அவர்களிடம் காணப்படுகின்றன.

இத்தகைய வாசிப்பற்ற பரம்பரை உருவாக்கமானது எமது நாட்டுக்கும் சமூகத்துக்கும் பாதகமான விளைவுகளையே கொண்டுதரவல்லது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இன்றைய நவீன யுகத்தில் வாசிப்புப் பழக்கத்திலிருந்து தூரமான ஒரு பரம்பரை உருவாகிக் கொண்டிருக்கின்றது.

தொழிநுட்ப சாதனங்கள் மீதான மோகம் இளைஞர்களிடத்தில் வாசிப்புப் பழக்கத்தை அடியோடு இல்லாமலாக்கியுள்ளது. பல்வேறு தினசரிப் பத்திரிகைகள் எமது நாட்டில் வெளிவருகின்ற போதிலும் அவற்றின் பெயர்கள் கூடத் தெரியாத நிலையில் இன்றைய இளம் சந்ததியினர் காணப்படுகின்றனர் என்பது வேதனையான விடயமாகும்.

வாசிப்பின் மீது ஆர்வம் கொண்ட சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதில் பெற்றோர்கள், பாடசாலைகள் மற்றும் சமூகம் ஆகியவற்றுக்கு சரிசமமான பங்கிருக்கின்றது. உண்மையிலேயே இன்றைய இளைஞர்களும் மாணவர்களும் சமூக வலைத்தளங்கள், சினிமாக்கள், போதைப் பொருள் பாவனை போன்றவற்றின் தாக்கங்களினால் மோசமான திசைகளை நோக்கிப் பயணிக்கின்றனர்.

எனவே, அவர்களுக்கு வாசிப்பின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துவது அவசியமாகும். வாழ்க்கை என்பது தேடல்கள் நிறைந்தது. அந்தத் தேடலை நோக்கிய பாதை தெளிவாகவுள்ள போது வாழ்க்கை வெளிச்சமாகி விடும். அந்த வெளிச்சம் நிறைந்த வாழ்க்கையை ஏற்படுத்துவதில் நல்ல நூல்கள் மீதான வாசிப்பு பெரும் பங்கு வகிக்கின்றது.

அந்த வகையில், வாசிப்புப் பழக்கத்திலிருந்து தூரமாகியிருக்கும் இன்றைய இளம் சந்ததியினர் தம்மை அறிவாளுமை மிக்கவர்களாக வளர்த்துக் கொள்வதில் பெரிதும் துணைபுரிகின்ற வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கான இலகுவான 10 வழிகளை அடுத்து நோக்குவோம்.

1. சிறந்த மனநிலையை உருவாக்கிக் கொள்ளல்:

வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்துக் கொள்வதில் ஒருவரின் மனநிலை (Mindset) பிரதான பங்காற்றுகின்றது. உண்ணுதல், சுவாசித்தல் போன்றன வாழ்வில் எவ்வாறு முக்கிய இடத்தை வகிக்கின்றனவோ அவ்வாறே வாசிப்பையும் வாழ்வோடு ஒன்றிணைந்த ஓர் இயல்பான செயற்பாடாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

எமது உள்ளத்தில் வாசிப்பிற்கான முக்கியத்துவத்தை ஆழமாகப் பதிக்கின்ற போது வாசிப்புப் பழக்கம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்ததாக மாறிவிடும். புத்தகங்களை வாசிப்பதன் மூலம் எமது வாழ்க்கையானது வெற்றியின் பக்கம் பயணிக்கிறது என்பதை மனதிற் கொள்ள வேண்டும்.

நல்ல நூல்கள் நல்ல நண்பர்கள் என்பார்கள். அவற்றைப் படிப்பதன் மூலம் உலகை வெற்றி கொள்வதற்கான புதிய வழிகளும் புதிய சிந்தனைகளும் பிறக்கின்றன. எனவே, சிறு வயது முதலே பிள்ளைகளுக்கு வாசிப்பின் சுவையை ஊட்டி வளர்க்கின்ற போது வாசிப்பை நேசிக்கக்கூடிய அறிவார்ந்த ஓர் இளம் சந்ததி உருவாகும்.

2. வாசிப்பதற்கான இலக்கைத் தீர்மானித்தல்

எப்போதுமே எம்மால் எட்ட முடியுமான இலக்குகளை வரைந்து கொள்ள வேண்டும். வாசிப்புப் பழக்கம் குறைந்தவர்கள் ஒரு நாளைக்கு 20 பக்கங்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு புத்தகம் என்ற அளவிலிருந்து தொடங்குவது சிறப்பாக இருக்கும். பின்னர் வாசிப்பின் சுவையை உணர்ந்து விட்டால் புத்தகங்களின் எண்ணிக்கை தானாகவே உயர்ந்து செல்லும்.

வாசிப்பதற்கான இலக்கை தத்தமது இயலுமைகளுக்கேற்ப வரையறுத்துக் கொள்ளும் போது அது அழுத்தங்களில்லாத மகிழ்ச்சியான ஒரு செயற்பாடாக மாறும். அத்தகைய மகிழ்ச்சிகரமான வாசிப்பே ஆழமானதாகவும் பயன்மிக்கதாகவும் அமையும்.

அதேபோன்று ஒரு வருடத்தில் அல்லது ஒரு மாதத்தில் இத்தனை புத்தகங்களை வாசித்து முடிக்க வேண்டும் என்ற இலக்கை வரையறுத்துக் கொள்வதும் (Reading Goals) வாசிப்புப் பழக்கத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு உந்துதலாக அமையும்.

3. அமைதியான சூழலைத் தேர்ந்தெடுத்தல்

எந்த ஒரு செயற்பாட்டையும் சிறப்பானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் ஆக்கிக் கொள்வதில் சூழல் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றது. வாசிப்பை வினைத்திறன் மிக்கதாக மாற்றிக்கொள்வதற்கு அமைதியான சூழல் அவசியமாகும்.

நாம் வாசிப்பதற்காக தெரிவு செய்யும் இடம் எமது கவனத்தைக் கலைக்கக்கூடியதாக அமைந்துவிடக் கூடாது. தொலைக்காட்சி, வானொலி, கணனி, கைத்தொலைபேசி போன்ற கவனத்தைத் திசை திருப்பக்கூடிய சாதனங்களிலிருந்து தொலைவான தூரத்தில் வாசிப்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொள்வது மிகமுக்கியமானதாகும்.

அதேபோன்று ஆரம்பத்திலிருந்தே சிறுவர்களிடம் கைத்தொலைபேசிகளைக் கொடுத்து அவர்களை அதற்கு அடிமையாக்கி விடாமல் நல்ல புத்தகங்களை அவர்களுக்கு வாங்கிக் கொடுத்து அவற்றை விருப்பத்தோடு வாசிப்பதற்கான ஆர்வத்தையும் பயிற்சியையும் வழங்க வேண்டும். வாசிப்பதற்குப் பொருத்தமான சூழலை வீடுகளில் அமைத்துக் கொடுப்பது பெற்றோரின் பொறுப்பாகும்.

4. தினமும் வாசிப்பதற்காக நேரத்தை ஒதுக்குதல்

வாசிப்பதற்காக தினமும் குறித்த ஒரு நேரத்தை ஒதுக்குவது வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதற்குப் பெரிதும் துணைநிற்கின்றது. இன்று தேவையற்ற விடயங்களுக்காக பல மணி நேரங்களை செலவிடுகின்ற நாம், பெறுமதிமிக்க வாசிப்புப் பழக்கத்திற்காக தினமும் சில மணி நேரங்களையாவது ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் நல்ல புத்தகங்கள் எங்கிருந்தாலும் தேடிப் பிடித்து வாங்கும் பழக்கமுடையவராக இருந்தார். அவர் தினமும் காலைச் சாப்பாட்டுக்கு முன்பாகவே ஒரு புதிய புத்தகத்தை படித்து முடிக்கக்கூடிய ஆற்றலுடையவராக இருந்தார். அதேபோன்று கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவும் பல்வேறு பணிகளுக்கும் மத்தியில் வாசிப்பில் ஆர்வம் காட்டுபவராக இருந்தார்.  

ஆனால் இன்றைய மாணவர்கள் வாசிப்பு என்ற நல்லதொரு செயற்பாட்டை விட்டும் தூரமாகிக் கொண்டிருப்பது ஆரோக்கியமானதன்று. பாடசாலைகள் மாணவர்களிடம் வாசிப்பை மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

இன்றைய பாடசாலைக் கல்வியில் மாணவர்களின் வாசிப்பை வளர்ப்பதற்காக நூலகப் பாடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான பாடசாலைகளில் இது பெயரளவுப் பாடமாகவே காணப்படுகின்றது.

எனவே, நூலகப் பாடத்தினை வினைத்திறனாகப் பயன்படுத்தி மாணவர்களிடத்திலே வாசிப்பை ஊக்குவிக்க வேண்டிய முக்கியமான பொறுப்பை ஒவ்வொரு பாடசாலையும் ஏற்க வேண்டும்.

5. வருமானத்தில் சிறு பகுதியை நூல்களுக்காக செலவிடல்

ஒவ்வொரு மாதமும் வருமானத்தின் சிறு பகுதியை நூல்களை வாங்குவதற்காக ஒதுக்கிக் கொள்வது சிறந்ததொரு விடயமாகும். புத்தகங்களுக்காக எமது பணத்தை செலவிடுவதால் ஒருபோதும் நஷ்டம் ஏற்படமாட்டாது.

ஏனெனில், அவை எமது வாழ்வைச் செப்பனிடுவதற்கான சிறந்த வழிகாட்டிகளாகும். புத்தகங்கள் இல்லாத வீடு உயிரே இல்லாத உடலைப் போன்றதாகும். தேவையான நூல்களை குறித்து வைத்துக் கொண்டு (Book List), ஒவ்வொரு மாதமும் வருமானத்தின் சிறு பகுதியை முதலீடு செய்து அவற்றை வாங்கிக் கொள்வதன் மூலம் வீடுகளிலும் நூலகங்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.

வீடுகளில் நூலகங்கள் அமையப் பெறுவதென்பது எமது பிள்ளைகளுக்குக் கிடைக்கக்கூடிய மிகப் பெரும் வரமாகும். இதன் மூலம் அவர்களது வாசிப்பு ஆர்வம் அதிகரிக்கும். அதேபோன்று புத்தகக் கண்காட்சிகள் (Book Fair) இடம்பெறும்போது குடும்பத்தினரோடு சென்று தேவையான நூல்களை சேகரிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

2009ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசைப் பெற்றுக் கொண்ட வெங்கட்ராமன் இராமகிருஷ்ணனிடம்  நோபல் பரிசாகக் கிடைத்த பணத்தை என்ன செய்யப் போகின்றீர்கள் என ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்ட போது அவர், நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டி இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

6. எப்போதும் புத்தகத்தை கையில் வைத்துக்கொள்ளல்

பல்வேறு வேலைகளுக்கு மத்தியிலும் வாசிப்பதற்கான சந்தர்ப்பங்களை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். எம்மோடு எப்போதும் புத்தகங்கள், பத்திரிகைகளை வைத்திருப்பது வாசிப்பிற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான சிறந்ததொரு வழிமுறையாகும்.

கையடக்கத் தொலைபேசிகள் எந்நேரமும் எம்மோடு ஒட்டிக் கொண்டிருப்பது போல புத்தகங்களையும் எம்மோடு கூடவே வைத்திருப்பது வாசிப்பின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும். உண்மையிலேயே புத்தகங்கள் அல்லது பத்திரிகைகளை எமது கைகளிலே வைத்திருப்பதனால் அன்றாட வேலைகளுக்கு மத்தியில் கிடைக்கும் சிறிய சிறிய ஓய்வு நேரங்களைக்கூட வாசிப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஜப்பானியர்கள் காத்திருக்கும் நேரங்களிலும் (Waiting Time) வாகனங்களில் பயணம் செய்யும் போதும் வாசிப்புப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். நான் இப்போது வாசிக்கும் விடயம் என்றோ ஒருநாள் எனக்கு உதவும் என்ற மனோநிலையில் அவர்கள் கிடைக்கின்ற ஓய்வு நேரங்களை வாசிப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சிறையில் இருந்த போது கூட மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற பல தலைவர்கள் வாசிப்பில் ஈடுபட்டுள்ளனர். புத்தகங்களோடு நட்புக் கொண்டவர்கள்தான் இந்த உலகில் அதிகம் சாதித்துக் காட்டியவர்கள் என்ற பேருண்மையை நாம் வரலாறுகளிலிருந்து கண்டு கொள்ள முடியும்.

7. பயன்தரும் நூல்களைத் தெரிவு செய்தல்

வாசிப்பில் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கு பயன்மிக்க நூல்களைத் தெரிவு செய்வது முக்கியமானதாகும். இன்று வணிக நோக்கத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு பல நூல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. எந்தவிதமான கருத்துக்களுமற்ற வெறுமனே அட்டைப்படக் கவர்ச்சிகளைப் பார்த்து நூல்களைத் தெரிவு செய்து வாசிக்கின்ற போது வாசிப்பின் மீதான ஆர்வம் குறைந்துவிடும்.

வாசிப்பதற்காக நூல்களைத் தெரிவு செய்யும் போது தலைப்பு, உள்ளடக்கம், நூலாசிரியர், பதிப்பகம் முதலான விடயங்களில் கவனம் செலுத்துவது அவசியமாகும். அதேபோன்று சிறுவர்களுக்காக யதார்த்தமற்ற, கற்பனையான கதை நூல்களையல்லாமல் படிப்பினை தரக்கூடிய வரலாற்றுக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட சிறுவர் நூல்களைத் தெரிவு செய்து கொடுப்பதும் பயனுள்ளதாக அமையும்.

8. பல்துறை சார்ந்த நூல்களை வாசித்தல்

ஒரே விடயம் சார்ந்த நூல்களை தொடராக வாசிப்பதானது சலிப்பையும் சோம்பலையும் ஏற்படுத்தும். பல்துறை சார்ந்த நூல்களை வாசிக்கும் போது வாசிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். 

ஆகையால் சகலவிதமான நூல்களையும் வாசிக்கும் போதுதான் சிந்தனை ஆற்றல், கற்பனை வளம், மொழித் தேர்ச்சி மற்றும் அறிவுத் திறன் என்பன விருத்தியடையும். இன்றைய இளம் சந்ததியினரில் பெரும்பாலானோர் எழுத்தாற்றல் அற்றவர்களாகவும் பேச்சாற்றல் குறைந்தவர்களாகவும் திகழ்வதற்கு அவர்களிடம் வாசிப்புப் பழக்கம் பூச்சிய நிலையில் இருப்பதே காரணமாகும்.

அறிவியற் கல்லூரி ஒன்றின் நிகழ்வில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறிய வார்த்தைகள் இங்கு கவனிக்கத்தக்கவை:

"புத்தகம் படிக்கும் பழக்கம் வந்தால் சிந்திக்கும் திறன் வரும். சிந்திக்கும் திறன் வந்தால் அறிவு பெருகும். அறிவு பெருகினால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனது வாழ்வில் பெரும்பாலான நேரத்தை புத்தகங்கள் வாசிப்பதிலேயே கழித்திருக்கிறேன். என் முயற்சியில் தடங்கல் ஏற்பட்டால் புத்தகங்களே எனக்கு வழிகாட்டியாக இருக்கும். நான் கண்ணீர் சிந்தும் போது அவையே கண்ணீர் துடைக்கும் விரலாக மாறும்".

9. தொழிநுட்பத்தைப் பயன்படுத்தல்

புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு அதன் பக்கங்களைத் தொட்டுணர்ந்து வாசிப்பதில்தான் ஆத்மார்ந்தமான மகிழ்ச்சி இருக்கிறது. கணனித் திரைகளில் வாசிப்பதை விட புத்தகங்களை கையில் வைத்துப் படிக்கும்போதுதான் அதனது கருத்துக்களை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் (Comprehension) அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

என்றாலும் செல்லுமிடமெல்லாம் புத்தகத்தை சுமந்து கொண்டு செல்வதென்பது அனைவருக்கும் சாத்தியமான விடயமல்ல. தொழிநுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியானது இலகுவாக வாசிப்பதற்கான வாயில்களை ஏற்படுத்தித் தந்துள்ளது. e-library, e-books, e-paper போன்றவற்றினூடாக எமது கையடக்கத் தொலைபேசியில் தேவையான நூல்கள், பத்திரிகைகளைத் தரவிறக்கம் செய்து வாசிப்பதற்கான வசதிகள் காணப்படுகின்றன.

கணனி, கைத்தொலைபேசிகள் போன்றவற்றில் வீணான விளையாட்டுக்களில் ஈடுபட்டு நேரங்களை வீணாக்குவதை விட்டுவிட்டு வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூல்களைத் தேடி வாசிப்பது பயனுள்ள செயற்பாடாக அமையும். சுருக்கமாகச் சொன்னால், தொழிநுட்பத்தைப் பயன்படுத்துவதானது அதிகமான நூல்களை இலகுவாகவும் செலவில்லாமலும் வாசிப்பதற்கான சந்தர்ப்பத்தை எமக்கு ஏற்படுத்தித் தருகின்றது.

10. வாசித்தவற்றை ஏனையவர்களோடு பகிர்ந்து கொள்தல்

நாம் வாசிப்பதற்காக வரையறுத்துக் கொண்ட இலக்குகளை (Reading Goals) எவருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஆனால் வாசிக்கும் விடயங்களை பிறரோடு பகிர்ந்து கொள்வதன் மூலமாக வாசிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கின்றது.

வாசிக்கும் விடயங்களை ஏனையவர்களுடன் பகிர்ந்து, கலந்துரையாடும் போது அறியாத, புதிய விடயங்களை அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமும் கிட்டும். எமது வாசிப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஆழமான வாசிப்பிற்குத் தூண்டுதலாகவும் அமைகின்றது.

பத்திரிகைகள் மற்றும் நூல்களை வாசிக்கும் போது முக்கியமான விடயங்களைக் குறிப்பெடுக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது வாசிப்பை அர்த்தமுள்ளதாக மாற்றும். அதேபோன்று, வாசிக்கும் விடயங்களைக் கலந்துரையாடுவதற்கென ஐரோப்பிய நாடுகளில் வாசிப்புக் கழகங்கள் காணப்படுகின்றன.

நூல்களோடும் நூல்களோடு உறவாடக் கூடியவர்களோடும் தொடர்புகளைப் பேணுவது மோசமான சிந்தனைகள் மற்றும் செயல்களை விட்டும் எம்மைத் தூரப்படுத்தும்.

எனவே, இத்தகைய ஆக்கபூர்வமான வாசிப்புக் கழகங்களை எமது பாடசாலை மட்டத்திலும் சமூக மட்டத்திலும் உருவாக்குவதன் மூலம் வாசிப்புக் கலாசாரம் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும்.