தகவல் அறியும் சட்டம்: உரிமையா? தொல்லையா?
றிப்தி அலி
"தகவல் அறியும் உரிமை சட்டத்தினை அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும்" என கல்முனை மேயர் ஏ.எம்.றகீப் வெளியிட்டிருக்கும் கருத்து பெரும் விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கின்றது.
நீண்ட கால எதிர்பார்ப்பு மற்றும் சிரமங்களுக்கு பின்னர் நல்லாட்சி அரசாங்கம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், "அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட இந்த விடயத்தினை 20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இல்லாமல் செய்திருக்க வேண்டும்.
இந்த சட்டம் வீணானதொரு தொல்லையாக உள்ளது. நிர்வாக ரீதியாக உள்ளவர்களுக்கு இது தொடர்பில் தெரியும். குறித்த சட்டத்தின் ஊடாக கண்டதையெல்லாம் கேட்டகின்றனர். இதற்கு பதில் வழங்குவதற்காக ஒருவரை நியமிக்க வேண்டியுள்ளது" என சட்டத்தரணியான மேயர் றகீப் கூறியிருக்கின்றார்.
கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, "நிர்வாகத்தினை கொண்டு செல்வதற்கு இதனால் மிகப் பெரிய இடையூறு உள்ளது. இந்த சட்டத்தினை புத்திஜீவிகள் பயன்படுத்துவதாக நான் காணவில்லை. மாறாக நிர்வாகத்தில் இருப்பவர்களை பழிவாங்கும் நோக்கிலும் இடைஞ்சல் ஏற்படுத்தும் நோக்கிலும் இதனை பயன்படுத்துகின்றனர்" என்ற குற்றச்சாட்டுக்களையும் மேயர் முன்வைத்திருக்கின்றார்.
கல்முனை மேயரினால் கடும் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்ட இந்த தகவலை அணுகுவதற்கான உரிமை, கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக பிரஜைகளின் அடிப்படை உரிமையாக்கப்பட்டது.
அது மாத்திரமல்லாமல், தகவல் அறியும் உரிமைக்கான பொறிமுறையினை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பிலான 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் 04ஆம் திகதியிலிருந்து அமுலிலுள்ளது.
புத்திஜீவிகளுக்கு பக்கபலமானதாக காணப்படுகின்ற இந்த தகவல் உரிமையை வாய் மொழியில் அன்றி, எழுத்து மூலமாகவே கோர வேண்டும் என்பது முக்கிய விடயமாகும்.
இந்த சட்டத்திற்கிணங்க, மக்களுக்குத் தேவையான தகவல்களை தடையின்றி பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெற்றதுடன் அதனை வழங்க வேண்டியது அரச நிறுவனங்களின் பொறுப்பாகியது.
குறிப்பாக மக்களின் வரிப்பணத்திலிருந்து மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பான சரியான தகவல்களை மக்களுக்கு தாமதமின்றி வழங்கும் பொறுப்பினை அரச அலுவலர்கள் கொண்டுள்ளனர் என்பது முக்கிய விடயமாகும்.
இந்த சட்டத்தின் பிரகாரம், அரச நிறுவனங்களான அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாண சபைகள் மற்றும் அவற்றின் நிறுவனங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், உள்ளுராட்சி மன்றங்கள், 20 வீத பங்குகளைக் கொண்ட அல்லது மறைமுக நிர்வாகங்களை கொண்ட நிறுவனங்கள், அரசிடமிருந்து ஒப்பந்தம் பெற்றுள்ள அல்லது உடன்படிக்கை செய்த அல்லது பற்றுச்சீட்டு அடிப்படையில் பொதுப்பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள், அரசாங்கம் அல்லது வெளிநாட்டு அரசாங்கம் அல்லது அமைப்பின் மூலம் நிதி பெற்றுக்கொள்கின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், அனைத்து நீதிமன்றங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் தகவல்களை கோர முடியும்.
இதற்காக மேற்குறிப்பிட்ட அனைத்து நிறுவனங்களிலும் தகவல் உத்தியோகத்தர் நியமிக்கப்பட வேண்டும். குறித்த உத்தியோகத்தர் - தகவல்களை வழங்குவதற்கு தடையாக இருத்தல், பொய்யான தகவல்களை வழங்குதல். தகவல்களை அழித்தல், மேன் முறையீட்டை நிராகரித்தல் மற்றும் இதனுடன் தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்டால் 50,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டு வருட சிறைத் தண்டனை அல்லது அபராதத்துடன் சிறைத் தண்டனை ஆகிய இரண்டுக்கும் உள்ளாவர்.
அதேபோன்று தகவல் உத்தியோகத்தருக்கு உரிய தகவல்களை வழங்குவதற்கு ஒத்துழைப்பை வழங்காத உத்தியோகத்தரொருவர் 10,000 ரூபா அபராதத்திற்கு உள்ளாக நேரிடும்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் குறிப்பிடப்பட்டுள்ள 'வழங்கப்பட முடியாத தகவல்களைத்' தவிர ஏனைய அனைத்து தகவல்களையும் தகவல் உத்தியோகத்தர் வழங்க வேண்டும் என்பது இதிலிருந்து தெளிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.
"குரல் அற்ற மக்களுக்கு குரல் கொடுப்பதற்காக இந்த சட்டம் பெரிதும் பயனளிக்கின்றது" என கிரிந்த புஹூல்வெல்ல பிரதேச செயலாளர் சிந்தக அபேவிக்ரம, 2019ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் திகதி தினகரன் பத்திரிகையில் வெளியான 'தகவல்' எனும் சஞ்சிககைக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பட்டுள்ளார்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள கண்ணகி கிராமத்தைச் சேர்ந்த பாக்கியம், தனக்கு கிடைக்காது போகவிருந்த இழப்பீட்டுத் தொகையை தகவல் அறியும் சட்டத்தினூடாக பெற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
மொரட்டுவை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கட்டுபெத்த போதிராஜ வித்தியாலயத்திற்கு அருகில் பாதசாரி கடவை தகவல் உரிமை விண்ணப்பத்தின் மூலம் மீள அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது போன்று அரச நிறுவனங்களினால் பாதிக்கப்பட்ட பல ஏழைகள் இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக பல்வேறு பயன்களை பெற்றுள்ளனர். இவ்வாறான நிலையிலேயே கல்முனை மேயர், குறித்த சட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டிருக்கின்றார்.
இந்த சட்டத்தினை நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களின் காலடியில் கொண்டு செல்வதற்கு தேவையான பல்வேறு செயற்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான நிலையில் கல்முனை மேயர் இந்த சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த தகவல் அறியும் சட்டத்தின் காரணமாக உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளில் மக்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர் என 74,000 மக்கள் சனத்தொகையினைக் கொண்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரான தியாகாராஜா நிரோஷ் குறிப்பிடுகின்றார்.
"பொதுமக்களின் வரிப் பணத்தின் மூலம் செயற்படுகின்ற உள்ளூராட்சி மன்றங்கள், அவர்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியுள்ளது. தகவல் அறியும் சட்ட மூலத்தின் ஊடாக இந்த பொறுப்புக் கூறல் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சட்டத்தினை மேலும் வினைத்திறனாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்" என்றும் நிரோஷ் கோரிக்கை விடுக்கிறார்.
இதேவேளை, "அரசியலமைப்பில் உள்ள தகவலை அணுகுவதற்கான உரிமையினை பாதுகாக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும்" என இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தகவல் அறியும் உரிமை தொடர்பான வளவாளர் கமல் லியனாராச்சி வலியுறுத்தி குறிப்பிடுகின்றார்.
"அரசியல்வாதியாகிய மேயருக்கு இந்த விடயத்தில் கருத்துக் கூற முடியாது. இன்று அவர் மேயராக இருப்பார் நாளை மற்றுமொருவர் குறித்த பதவியில் இருப்பார். எவ்வாறாயினும் இந்த விடயத்திற்கு பொறுப்பான நிரந்தர அதிகாரிகள் உள்ளூராட்சி மன்றத்தில் உள்ளனர். அவர்களே தகவல் அறிவதற்கு பொறுப்பாக செயற்படுவர்" என கமல் லியனாராச்சி கூறினார்.
இந்த சட்டத்தினை மேலும் வலுப்படுத்துவதற்காக ஊடகத் துறை அமைச்சில் தனியான பிரிவொன்று செயற்படுகின்றது. குறித்த பிரிவினால் நாடளாவிய ரீதியில் செயலமர்வுகள், விழிப்புணர்;வு நிகழ்ச்சிகள், நடமாடும் சேவைகள் என பல நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அது மாத்திரமல்லாமல் இந்த சட்டத்தை பொது நோக்கத்திற்காக பயன்படுத்தியவர்கள் ஊடகத் துறை அமைச்சினால் கடந்த வருடம் விருதி வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மக்களின் பங்குபற்றலை மேலும் ஊக்குவிப்பதற்காவே இவை முன்னெடுக்கப்படுகின்றன.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், ட்ரான்பெரன்ஷி இன்டர்நெஷனல், ஊடக அமைப்புகள் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆகியனவும் தகவல் அறியும் விடயத்தில் பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
இதேவேளை, "19ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்பட்ட சிறந்த விடயம் என்பதினாலேயே தகவலை அணுகுவதற்கான உரிமை, 20ஆவது திருத்தச் சட்டத்தில் தக்க வைக்கப்பட்டுள்ளது" என ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
"இதற்கமைய தகவல்கள வழங்க வேண்டியது அரச நிறுவனங்களின் பொறுப்பாகும். 20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இந்த விடயம் மேலும் வலுப்படுத்தப்படும். ஏனைய நாடுகளில் அமுலிலுள்ள தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து தற்போதைய சட்டத்திலுள்ள குறைபாடுகளை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்" என அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையில் காணப்படுகின்ற தகவல் அறியும் உரிமை சட்டத்தினை உலகளாவிய ரீதியில் சிறந்த சட்டமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல மேலும் கூறினார்.
இவ்வாறு ஆட்சியாளர்களினாலேயே அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த சட்டத்தின் ஊடாக பொதுமக்களின் கைகளில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான சட்டத்தினை கல்முனை மேயர் மாத்திரம் எதிர்க்கின்றமை மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் கல்முனை மாநகரின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இந்த தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக ஆராய்ந்து அறிந்துகொள்ள தூண்டுதலாக அமைகின்றது!
Comments (0)
Facebook Comments (0)