மன்மோகன் சிங்கின் மறைவு குறித்த இரங்கல் பதிவேடு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் அவர்கள் 2024 டிசம்பர் 26 ஆம் திகதி புது டில்லியில் காலமானார். கலாநிதி மன்மோகன் சிங், 2004 மே 22ஆம் திகதி முதல் 2014 மே 26ஆம் திகதி வரை இந்தியாவின் 13ஆவது பிரதமராக சேவையாற்றியுள்ளார்.
புகழ்மிக்க பொருளாதார நிபுணராகவும் தொலைநோக்கு சிந்தனைகளைக் கொண்ட தலைவராகவும் கலாநிதி மன்மோகன் சிங், 1991 முதல் 1996 வரையில் நிதி அமைச்சராக சேவையாற்றி முக்கியத்துவம் மிக்க பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அறிமுகம் செய்து நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு வழிசமைத்திருந்தார்.
பணிவு, புலமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு பெயர்பெற்ற கலாநிதி மன்மோகன் சிங்கின் தலைமைத்துவமும் நேர்மையும் தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதுடன் வலுவான முன்னேற்றம் மற்றும் சேவையின் ஆழமான மரபினை விட்டுச்செல்கிறது.
டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு 1987 இல் இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. மறைந்த இத்தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியா முழுவதிலும் 2024 டிசம்பர் 26ஆம் திகதி முதல் 2025 ஜனவரி 1ஆம் திகதி வரையில் ஒரு வார கால தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதேவேளை, 2024 டிசம்பர் 30ஆம் திகதி முதல் 2025 ஜனவரி 1ஆம் திகதி வரை காலை 10 மணி முதல் மாலை 03 மணி வரை கொழும்பு - 03 இலக்கம் 36-38 இல் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இரங்கல் பதிவேடு வைக்கப்பட்டிருக்கும்.
Comments (0)
Facebook Comments (0)