அமெரிக்கத் தூதுவர்களின் நிதியத்தினால் மறுசீரமைக்கப்பட்ட கண்டி அரசர்களின் அரண்மனை திறப்பு

அமெரிக்கத் தூதுவர்களின் நிதியத்தினால் மறுசீரமைக்கப்பட்ட கண்டி அரசர்களின் அரண்மனை திறப்பு

புதிதாக மறுசீரமைக்கப்பட்ட பழைய கண்டி அரசர்களின் அரண்மனை மற்றும் தொல்பொருள் நூதனசாலை ஆகியவற்றினை மீண்டும் திறந்து வைக்கும் நிகழ்வை கலாச்சார அமைச்சு மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றின் பங்காண்மையுடன் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பெருமையுடன் கொண்டாடியது.

அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் பேராசியர் ஹினிதும சுனில் செனவி ஆகியோர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

கலாச்சாரப் பாதுகாப்பிற்கான அமெரிக்கத் தூதுவர்கள் நிதியத்தினால் வழங்கப்பட்ட 265,000 அமெரிக்க டொலர்கள் (ரூ.77 மில்லியனுக்கும் அதிகமான) மானியத்தின் காரணமாக இந்த முக்கியமான கலாச்சாரப் பாதுகாப்புச் செயற்திட்டம் சாத்தியமானது.     

2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்செயற்திட்டமானது இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. முதலாம் கட்ட நடவடிக்கைகளின் போது அரசர்களின் அரண்மனையின் வரலாற்று அடிப்படைக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதிலும், பார்வையிடுவதற்காக வருகை தரும் மாற்றுத்திறனுடைய விருந்தினர்களுக்கான அணுகலை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் வளமான கலாச்சார மரபுரிமையினைப் பாதுகாக்கும் அதேவேளை பார்வையிட வருகைதரும் விருந்தினர்களுக்கு மிகவும் ஈடுபாட்டுடன் கூடிய மற்றும் கற்றல் நிறைந்த ஒரு அனுபவத்தை வழங்கும் வகையில் தொல்பொருள் நூதனசாலையின் காட்சியமைப்புகள் மற்றும் வசதிகளை இரண்டாம் கட்டம் மேம்படுத்தியது.

வைபவத்தில் கலாச்சாரப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தினை அடிக்கோடிட்டுக்காட்டிய தூதுவர் ஜுலீ சங், “பழைய கண்டி அரசர்களின் அரண்மனை மற்றும் தொல்பொருள் நூதனசாலை ஆகியவற்றின் மறுசீரமைப்பானது அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையில் காணப்படும் பங்காண்மையின் சக்திக்கான ஒரு சான்றாகும்.

இவ்வாறான முன்முயற்சிகளூடாக, இலங்கையின் கலாச்சார மரபுரிமைகளை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பது மட்டுமன்றி, அதன் வரலாற்றையும் பாரம்பரியங்களையும் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறோம்.

இந்த நூதனசாலை கலாச்சார சுற்றுலாவிற்கு ஆதரவாக விளங்கும் அதே வேளை புரிந்துணர்வை வளர்த்து இலங்கையர்கள் மற்றும் உலகளாவிய சுற்றுலாப்பயணிகள் ஆகிய இருசாராருமே இலங்கை வரலாற்றின் ஆழத்தைப் பார்வையிடுவதற்கான ஒரு நுழைவாயிலாகவும் அமைகிறது.

இலங்கையின் மரபுரிமைகளை கொண்டாடுகின்ற மற்றும் அதன் பொருளாதார மற்றும் கலாச்சார செழிப்பிற்குப் பங்களிப்புச் செய்யும் செயற்திட்டங்களில் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

“கலாச்சாரப் பாதுகாப்பிற்கான தூதுவர்கள் நிதியத்தின் ஊடாக அமெரிக்காவினால் நிதியுதவி வழங்கப்பட்ட இச்செயற்திட்டமானது, கண்டி அரசர்களின் அரண்மனை மற்றும் தொல்பொருள் நூதனசாலை ஆகியவற்றை பொதுமக்களுக்கு மிகவும் அணுகக்கூடியதாகவும் செழிப்பானதாகவும் ஆக்கியுள்ளதென” அமைச்சர் பேராசிரியர் சுனில் செனவி தெரிவித்தார்.

“வரலாற்றுச் சிறப்புமிக்க உட்கட்டமைப்புகளை பாதுகாப்பதன் மூலமும், நூதனசாலையின் அருங்காட்சியகத்தின் காட்சியமைப்புகளை மேம்படுத்துவதன் மூலமும், மாற்றுத்திறனாளிகள் உட்பட நூதனசாலையினைப் பார்வையிட வருகை தரும் விருந்தினர்கள் அனைவரும் இலங்கையின் கலாச்சார மரபுரிமையுடன் ஒரு அர்த்தமுள்ள தொடர்பினை ஏற்படுத்துவதற்கான இயலுமையினை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.

இவ்வொத்துழைப்பானது எமது வரலாற்றினைப் பாதுகாப்பது மட்டுமன்றி, எமது கலாச்சார அடையாளத்தினை இலங்கைக்கும் உலகிற்கும் எடுத்துக்காட்டும் விதத்தில் அந்த வரலாற்றினைக் கற்றுக்கொள்வதற்கும், அதை நயப்பதற்குமான ஒரு வெளியினையும் உருவாக்குகிறது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கலாச்சாரப் பாதுகாப்பிற்கான தூதுவர்கள் நிதியமானது கலாச்சார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் உலகளாவிய அர்ப்பணிப்பில் ஒரு மிகவும் இன்றியமையாத சாதனமாகும் என வலியுறுத்திய இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பொது அலுவல்களுக்கான ஆலோசகர் ஹைடி ஹட்டன்பக், “கலாச்சாரப் பாதுகாப்பிற்கான தூதுவர்கள் நிதியத்தினூடாக கண்டி அரசர்களின் அரண்மனையினை மறுசீரமைத்தமையானது, நிலைபேறான சுற்றுலாத்துறையினையும் பொருளாதார வளர்ச்சியினையும்  மேம்படுத்தும் அதேவேளை இலங்கையின் கலாச்சார மரபுரிமைகளையும் பாதுகாப்பதற்கான எமது உறுதிப்பாட்டிற்கான ஒரு சான்றாகும்.

இவற்றைப் பாதுகாப்பதற்கான பணியானது, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு கண்டி இராச்சியத்தின் வளமான வரலாறு மற்றும் மரபு பற்றிய மிகவும் ஆழமான மற்றும் அர்த்தமுள்ள ஒரு அனுபவத்தை வழங்கும் வகையில் இத்தலத்தை மேம்படுத்துகிறது.” எனக் குறிப்பிட்டார்.

கலாச்சாரப் பாதுகாப்பிற்கான அமெரிக்கத் தூதுவர்கள் நிதியம் (AFCP) பற்றி: 

கலாச்சாரப் பாதுகாப்பிற்கான அமெரிக்கத் தூதுவர்கள் நிதியமானது (AFCP) கடந்த 23 வருடங்களாக உலகளாவிய ரீதியில் 140இற்கும் மேற்பட்ட நாடுகளில் கலாச்சாரப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு உதவி செய்துள்ளது.

2001ஆம் ஆண்டு முதல் இலங்கையில் குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பாதுகாப்பதற்கான 17 செயற்திட்டங்களில் இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் பல்வேறு சமயம்சார்ந்த சமூகங்களுடன் அமெரிக்கா ஒத்துழைப்புடன் பணியாற்றியுள்ளது.

அமெரிக்க மக்களிடமிருந்து வழங்கப்பட்ட 1.3 மில்லியன் டொலர்கள் பெறுமதியுடைய நிதியுதவியினால் உதவி செய்யப்பட்ட இம்முன்முயற்சிகளுள், ரஜகல பௌத்த வன மடாலயத்தினை பாதுகாத்தல், அனுராதபுரம் தொல்பொருள் நூதனசாலையிலுள்ள சேகரிப்புகளைப் பாதுகாத்தல், மட்டக்களப்பு டச்சுக் கோட்டையினை மறுசீரமைத்தல் என்பனவும் உள்ளடங்குகின்றன.

இப்பாதுகாப்பு முயற்சிகள் தரையினையும் தாண்டி விரிவடைகின்றன. ஹம்பாந்தோட்டை கடற்பகுதியில் காணப்படும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் காணப்படும் மிகவும் பழமை வாய்ந்த கப்பல் சிதைவான கொடவாய கப்பல் சிதைவினை பாதுகாப்பதற்கு AFCP ஊடாக அமெரிக்கா உதவி செய்கிறது.

இரு நாடுகளுக்குமிடையே ஆழமான தொடர்புகளை வளர்க்கும் அதேவேளை இலங்கையின் வளமான கலாச்சார மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மரபுரிமைகளை பாதுகாப்பதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை இச்செயற்திட்டங்கள் பிரதிபலிக்கின்றன.